×

பாவங்களைப் போக்கும் பவானி அம்மன்

சென்னை அருகே பெரிய பாளையத்தில், பக்தர்களின் பாவம் போக்கும் வகையில் பவானி அம்மன் அருளாட்சி செய்து வருகிறாள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.இங்கு அம்பிகையின் கட்டளைப்படி அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பெரியபாளையத்து அம்மனுக்கு கோயில் ஒன்றினை எழுப்பினார்கள். மூலக் கர்ப்பக்கிரகத்தில் உள்ள அம்பிகையின் தலைப்பகுதியில், வளையல்கார வியாபாரி ஒருவர் இரும்புக் கம்பி கொண்டு துழாவியதால் உண்டான வடுவை இன்றும் காணலாம். சுயம்பு மூர்த்தியாய் எழுந்தருளியிருக்கும் அன்னையானவள், கவசம் இடப்பட்டு முன்புறமாய் அமர்ந்து இருக்க, பின்புறமாய் அன்னையின் திருவுருவம் சுத வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து தலை நாகமானது, குடை பிடித்திடும் வண்ணம் அன்னையின் சந்நதி அமைந்திருப்பது சிறப்பான அம்சமாகும்.உலக மக்கள் அனைவரையும் காத்தருளும் வண்ணம் அன்னையானவள், நான்கு கரங்கள் கொண்டு திகழ்கின்றாள். வலது முன்புறக் கரத்தில் சக்தி ஆயுதமும், பின்புறக் கரத்தில் சக்ராயுதமும் ஏந்தப்பட்டுள்ளன. இடது முன்புறக் கையில் கபாலமும், பின்புறக் கையில் சங்கும் ஏந்தப்பட்டுள்ளன. இடது முன்புறக் கையில் ஏந்தப்பட்டுள்ள கபாலத்தில், மூன்று தேவிகளும் இருப்பதாக கூறப்படுகின்றது. பவானி அம்மனின் முக அமைப்பு எல்லோரையும் கவர்ந்து இழுத்திடும் வண்ணம் அமைந்துள்ளது.

எடுப்பான மூக்கும், அதில் மின்னி ஒளிர்ந்திடும் மூக்குத்தியும், இதழ்களில் தவழும் புன்னைகையும், அன்னையைப் பார்ப்பவர்கள் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் இருக்கிறது. அவளுக்கு அணிவிக்கப்பட்டு இருக்கும் பட்டுப் புடவையும், ஆபரணங்களும் அவளின் தெய்வீக எழில் தோற்றத்துக்கு மேலும் அழகினைச் சேர்க்கின்றன. அம்பிகையின் பக்தர்கள், தங்கள் திருமணத்தின்போது ஒரு புதிய சடங்கு ஒன்றினை நடத்தி வருகின்றனர். திருமணத்தன்று மணமகன் மணமகளுக்கு கட்டிய தாலியைக் கழற்றி அம்பாளுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். பின் அன்னையின் அருள் மிகுந்து இருக்கும் மஞ்சளும், மஞ்சள் கயிறும் பெற்றுக் கொண்டு, அதனை அருளும் நீண்ட ஆயுளும் தருகின்ற அன்னையின் அருள் பிரசாதமாக பெண்கள் தங்கள் கழுத்தில் கட்டிக் கொள்வதை இன்றும் காண முடிகிறது.இப்படி தாலி காணிக்கை செலுத்துவதால், காணிக்கை செலுத்தியவர்களின் குடும்பம் தழைத்து ஓங்குவதோடு, அப்பெண்களின் கணவர்களுக்கு நீண்ட ஆயுள் தந்து தாலிக்கு வலிமையைத் தந்தருளும் அன்னையாக பவானி அம்மன் திகழ்கின்றாள்.திருவள்ளூரில் இருந்து சுமார் 40 கி.மீ., தொலைவில் இந்த திருத்தலத்தை அடையலாம்.

The post பாவங்களைப் போக்கும் பவானி அம்மன் appeared first on Dinakaran.

Tags : Bhavani Amman ,Periya Palayam ,Chennai ,Bhavani ,Amman ,Ambikai ,Periyapalayat ,Bhavani Aman ,
× RELATED பவானியம்மன் கோயிலில் குவிந்த...